மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேர் பத்திரமாக மீட்பு!

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேரை போர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கி இருந்தவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு எம்.டி.குளோபல் கிங் என்ற சரக்கு கப்பல் வந்துக்கொண்டிருந்தது. இந்த கப்பலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த 2 பேர், மற்றும் 20 இந்தியர்கள் என மொத்தம் 22 பேர் மாலுமிகள் வந்து கொண்டிருந்தனர். இந்த கப்பல் குஜராத் அருகே சுமார் 93 நாட்டிகல் மைல்கள் தூரத்தில் அரபிகடலில் வந்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கத்தொடங்கியது. இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் அச்சமடைந்தனர். இது குறித்து இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து போர்பந்தர் கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போர்க்கப்பல்கள் மற்றும் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சரக்கு கப்பலில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த 22 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக இந்திய கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது.