அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான ரூ.3 கோடி ஆவின் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி கோரும் தமிழ்நாடு அரசின் கோப்பு மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அடுத்த 2 வாரத்தில் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அதிரடி கெடு விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் பதவி வகித்த காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ரூ.3 கோடி முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். ரவீந்தர் என்பவர் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார். பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக வலம் வந்த நிலையில் 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் பின்னர் விடுதலையானார் ராஜேந்திர பாலாஜி.
இதனிடையே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார் தந்த ரவீந்தரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ராஜேந்திர பாலாஜி மீது தாம் தந்த புகார் மீதான விசாரணை மிகவும் தாமதமாகவே நடைபெறுகிறது; இதனால் வழக்கை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார் ரவீந்தரன். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மிட்டால், எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு கடந்த கடந்த 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி கோரும் கோப்புகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மொத்தம் 3 முறை அனுப்பி வைக்கப்பட்டது; ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி கோரும் கோப்பு மீது ஏன் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார் என அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன், தமிழ்நாடு ஆளுநர் எதற்காக இந்த கோப்புகளை கிடப்பில் வைத்துள்ளார் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், விரைவாக ஆளுநர் தரப்பில் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கை நீதிபதிகள் இன்றும் விசாரித்தனர். இன்றைய விசாரணையின் போதும், ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகள் மீது 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ராஜேந்திர பாலாஜி தொடர்பான கோப்புகளை 2 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்து ஆளுநருக்கு தர வேண்டும்; இந்த 2 வார காலத்தில் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.