நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்கிறார் விஜய் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலத்தில் நடந்த ரெய்டு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தது. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை எழும்பூர் அருகே பாஜக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் அனுமதி இல்லை என்று கூறி போலீசார், பாஜகவினரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பாஜக போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், பாஜக நாடகமாடுவதை விட்டுவிட்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. டிவிகே பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அண்ணாமலை கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் களத்திற்கு வர சொல்லுங்க.. ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செஞ்சுட்டு இருக்காங்க. சினிமா சூட்டிங்கில் இருந்து அரசியல் செய்வாங்களா.. சினிமா சூட்டிங்கில் இருந்து கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். திரும்ப எனக்கும் பேசத் தெரியும். தவெகவும் ஒரு லிமிட்டை கிராஸ் செய்யக்கூடாது. நானும் தமிழக வெற்றிக் கழகத்தை மரியாதையாக தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அறிக்கை விடும் போது அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன விஜய் மாதிரி டான்ஸ் ஆடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறேனா.. நான் களத்தில் இருந்து போராடிக்கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறேன். இது என்ன வொர்க் பிரம் ஹோம் அரசியலா செய்கிறார்.
விஜய் 50 வயதில் தான் அரசியலுக்கு வர வேண்டுமா.. 30 வயதிலேயே ஏன் வரவில்லை. விஜய் யாருடைய பி டீம். நாடகம் யார் பண்ணுகிறாங்க. விஜய் தான் நாடகம் பண்ணுகிறார். தமிழக வெற்றிக் கழகம் தான் திமுகவின் பி டீம். உனக்கு என்ன தெரியும் மக்கள் கஷ்டத்தைப் பற்றி. சிகரெட் குடிப்ப படத்தில.. டிரிங்க்ஸ் அடிப்ப.. இதையெல்லாம் பண்ணிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தா.. மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன?.. சும்மா ஒரு குல்லாவை போட்டுக்கொண்டு இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் எல்லாம் சரியாகிடுமா.. சின்ன பசங்க மாதிரி பாஜகவுடன் சண்ட போடகூடாது.
காவல்துறையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, கைதுக்கு ஒத்துழைப்பு அழித்து அறவழியில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். ஆனால் காவல்துறை நடந்துகொண்ட விதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 6 மணிக்கு மேலே பெண்களை கைது செய்து வைக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால் அதையெல்லாம் மீறி, 6.50 மணியில் இருந்து 7.00 மணி வரை விடுவிக்கவில்லை. இனி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இனி போலீசிடம் தேதியை சொல்ல மாட்டோம். எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கேட்டு காவல்துறையிடம் கடிதம் கொடுக்க மாட்டோம். 7 ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். 7க்கும் அனுமதி தரவில்லை. கைது செய்திருந்தார்கள். காவல்துறை ஏவல் துறையாக மாறியுள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்கு நடக்கக் கூடிய போராட்டத்தில், டாஸ்மாக்கில் உள்ள எல்லா கடைகளிலும் பாஜக பெண் தொண்டர்கள் முதல்வரின் பிரேம் போட்ட புகைப்படத்தை ஆணி அடித்து ஒட்ட போகிறோம்.
இதேபோன்று அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக்குகளுக்கும் பூட்டு போட்டு போராடுவோம். காவல்துறை முடிந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும். இன்று இரவில் இருந்து காவல் துறையினருக்கு தூக்கம் இருக்காது. நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறையினர் இன்றிலிருந்து தூங்க கூடாது என்று பாஜக தொண்டர்களுக்கு சொல்லுகிறேன். எப்போதும் பொறுமையாக காவல்துறைக்கு ஆதரவாக பேசிய அரசியல்வாதி நான். என் தொண்டர்கள், சகோதரிகளை இழிவுபடுத்திய பிறகு என்ன நடந்தாலும் பார்த்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.