‘எம்புரான்’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு பிருத்விராஜை பாராட்டிய ரஜினி!

‘எம்புரான்’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு பிருத்விராஜை பாராட்டி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

மார்ச் 27-ம் தேதி பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் ரஜினியை சந்தித்த போது காட்டியிருக்கிறார் பிருத்விராஜ். படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரஜினி கூறியது குறித்து பிருத்விராஜ் தனது எக்ஸ் தளத்தில், “’எம்புரான்’ படத்தின் ட்ரெய்லரை முதல் நபராக பார்த்தவர் நீங்கள்தான். அதைப் பார்த்துவிட்டு நீங்கள் கூறிய வார்த்தைகளை மறக்க மாட்டேன். அவை தான் இந்த உலகிலேயே சிறந்தது. என்றென்றும் உங்கள் ரசிகன்” என்று பதிவிட்டுள்ளார். அதில் ரஜினியை டேக் செய்துள்ளார். இத்துடன் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எம்புரான்’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோகுல் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இப்போது திட்டமிட்டப்படி வெளியாகிறது. மலையாளத்தில் அதிக திரையரங்குகள், முதல் நாளில் அதிக வசூல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இப்படம் படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.