நானும் மோடியும் நிறைய விஷயங்கள் பேசினோம்: இளையராஜா!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புக் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ‘நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது – உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா, “நானும் மோடி அவர்களும் சிம்பொனி இசை உள்ளிட்ட நிறைய விஷயங்களை பற்றி பேசினோம். அவரது பாராட்டிற்கு தலை வணங்குகிறேன்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தன்னுடைய முதல் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதற்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுகள் வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வரவேற்றதோடு, இளையராஜாவின் இசைப்பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தார்.