நடிகர் அஜித் குமார் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் மேக்கிங் வீடியோவை மார்ச் 14 அன்று படக்குழு வெளியிட்டது. அதன் இறுதியில், படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் இன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தத் திரைப்படத்தில், நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக, அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அஜித் குமாரின் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா ஜோடியாகி இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ரம்யா’ என படக்குழு அறிவித்திருந்தது.
முன்னதாக, குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் பணியாற்றியது தொடர்பாக வெளியிட்ட பதிவில், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் விலைமதிப்பற்ற தருணங்கள் உள்ளன. இது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. அஜித் குமார் சாருடன் பணிபுரிவது எனக்கு ஒரு நீண்ட கனவாக இருந்தது. அவருடன் பணிபுரிவதில் நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ரவிசங்கர் சார் ஆகியோருக்கு நன்றி’’ என குறிப்பிட்டு இருந்தார்.
படத்தின் டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றதால் உறுதியாக இப்படம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தற்போது, படத்தின் முதல் பாடலான ’ஓஜி சம்பவம்’ பாடலை வெளியிட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்பாடலை விஷ்ணு எடவன் எழுத ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.