கடந்த 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றது அதிமுக. நீங்கள் நில்லுங்கள் பார்ப்போம் என்று சட்டப்பேரவையில் முனனாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திமுகவினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோளையும், கோட்பாட்டையும் நிறைவேற்றுவதாக இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒன்று கூட என் கண்ணுக்கு தெரியவில்லை. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகளின் நிலை துல்லியமாக குறிப்பிடப்படவில்லை. அதேபோல், பாதிக்கும் குறைவாகவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,200 கோடியில் 6,100 கிமீ சாலை அமைக்க முடியாது. ரூ.7,500 கோடியில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2,497 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தலா ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டும், பெரும்பாலான பள்ளிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. பல பள்ளிகளில் மரத்தடியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, அதிமுக ஆட்சி நடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டினீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செல்லூர் கே.ராஜூ, புள்ளிவிவரங்களை நாங்கள் சொல்லும்போது சொல்வோம். 2016-ல் தனித்து வெற்றி பெற்ற கட்சி அதிமுக. நீங்கள் தனித்து நில்லுங்கள் பார்ப்போம் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ராஜூ பேசியதாவது:-
ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி முடிய இன்னும் ஓராண்டுதான் உள்ளது. அதற்குள் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். கடந்த ஆண்டு ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஈட்டிய விடுப்பு பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரவேண்டிய இந்த அறிவிப்பு இந்த ஆண்டு வந்தது ஏன். இவ்வாறு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, தண்ணீரில் தெர்மாகோல் விடுவது எளிது, ஆனால் விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல என்றார்.
மேலும் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து ஒன்றிய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா பதில் அளித்தார்.
இதனைக்கேட்ட செல்லூர் ராஜு, தெர்மாகோல்.. தெர்மாகோல்னு.. என்று சொல்கிறீர்கள்.. ஆனால் அதிகாரிகள் சொல்லித்தானே அதை செய்தோம்.. இப்படி கிண்டல் பண்றீங்க சரி பரவாயில்ல என பதில் அளித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆட்சிதான் இருக்கும். மே மாதம்தான் தேர்தல். அதனால், இந்த ஆண்டுக்கான பணக்கொடையை ஏப்ரலில் பெறுவார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-
சட்டப்பேரவையில் ஒரு கோரிக்கையை வைக்கும் போது, நிதி அமைச்சரோ, அல்லது துறை சார்ந்த அமைச்சர்களோ பதிலளிக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை, முழுமையாக பேசவே விடுவதில்லை. இன்றும் கூட என்னை தெர்மோகோல், தெர்மோகோல் என்று கேலி செய்கின்றனர். அதிகாரிகள் சொல்வதால் அமைச்சர்கள் திட்டங்களை சென்று பார்க்கத்தான் செய்வார்கள். அதுபோல தான் மாவட்ட ஆட்சியர் என்னை அழைத்ததால் அத்திட்டத்தை போய் பார்த்தேன். அதைவைத்து இன்னும் என்னை கேலி செய்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம், இவர்களுடைய குறைகளை சொன்னால் அதை பற்றி பேச முடியாததால் என்னை தொடர்ந்து கிண்டல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.