தொகுதி மறுவரையறை குறித்து எப்படி விவாதிக்க முடியும்?: வானதி சீனிவாசன்!

எந்தவொரு அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடாத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்க முடியும்? என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

தமிழக அரசு சமீப காலமாக, சட்டரீதியான, ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் குறித்து அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்ட பின்னரே பாஜக ஆர்ப்பாட்டம் குறித்து அறிவித்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு செல்வதற்கு முன்பாகவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதெல்லாம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயலாகும். திமுகவுக்கு எதிராக கருத்து கூறும் எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்கு திமுக முயற்சிக்கிறது.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்த திட்டத்தையும் மத்திய அரசு முன்வைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் தெளிவாக கூறியிருந்தார். அதேபோல் மத்திய அரசும் இதுகுறித்து எந்த அறிவிப்புமே வெளியிடாத நிலையில், திமுகவினர் தங்களுடைய கற்பனை மூலம் உருவாக்கிக்கொண்ட சிந்தனையை கொண்டு எப்படி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும்.

அமலாக்கத் துறை வெளியிட்ட ரூ.1000 கோடி ஊழல் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, அதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரை அந்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தவெக தலைவர் விஜய்யை, அண்ணாமலை விமர்சித்திருப்பதற்கு நான் எப்படி கருத்து சொல்ல முடியும். பொதுவெளியில் நடிகைகளைப் பற்றி பேசியிருப்பது குறித்து அவரிடமே கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.