மணிப்பூர் மக்களின் ரத்த கண்ணீரை நேரில் போய் பாருங்க: திமுக எம்பி வில்சன்!

மணிப்பூர் மாநிலத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது; அந்த மக்களின் துயரங்களையும் வலிகளையும் அந்த மண்ணுக்கு சென்று நேரில் கேட்டறிந்து அந்த மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை என்று ராஜ்யசபாவில் திமுக எம்பி வில்சன் வலியுறுத்தினார்.

ராஜ்யசபாவில் திமுக எம்பி வில்சன் பேசியதாவது:-

எங்களது பால்ய காலங்களில், பள்ளி நாட்களில் “இந்தியா என்னுடய நாடு; இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர, சகோதரிகள்” என படித்திருக்கிறோம். ஆனால் இந்திய ஒன்றிய அரசுக்கு இன்று இந்த வார்த்தைகள் மீது நம்பிக்கை இருக்கிறதா? என நான் கேள்வி எழுப்புகிறேன். ஒன்றிய அரசானது, பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் பக்கம் நின்றிருக்க வேண்டும்; துயரம் சூழ்ந்த இருளான தருணங்களில் மணிப்பூர் மக்களின் கரம்பிடித்து ஆறுதலாக ஒன்றிய அரசு அரவணைத்திருக்க வேண்டும்; மணிப்பூர் மக்கள் சிந்திய ரத்த கண்ணீரை ஒன்றிய அரசு துடைத்திருக்க வேண்டும்; அந்த மக்கள் இழந்த வீடுகளை மீண்டும் கட்டித் தந்திருக்க வேண்டும்; மணிப்பூர் மக்கள் பறிகொடுத்த கண்ணியத்தை மீட்டெடுத்து தந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு இதைச் செய்யவில்லை.. இதற்கு பதிலாக மணிப்பூர் மக்களையே கைவிட்டுவிட்டது ஒன்றிய அரசு. மணிப்பூர் மக்களை புறக்கணித்துவிட்டது; இக்கட்டமான, துயரமான தருணங்களில் அந்த மக்களை கைவிட்டுவிட்டது ஒன்றிய அரசு.

2023-ம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் இனங்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் தொடங்கின. இது உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கிறது. கடந்த 22 மாதங்களாக இந்த உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதே தவிர இன்றைக்கு வரை முடிவுக்கு வந்ததாகவும் இல்லை. மணிப்பூர் பற்றி எரிந்த போது, மணிப்பூரின் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, அவர்கள் வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லாமல் அவர்களது குழந்தைகள் கதறி துடித்த போது, மணிப்பூரின் பெண்கள் கொடூரமாக, ஈவிரக்கமே இல்லாத மனிதாபிமானமற்ற வகையில் பாதிக்கப்பட்ட போது எங்கே போனார் நமது ஒன்றிய அரசின் பிரதமர்?

பிரதமர் நரேந்திர மோடி- மணிப்பூர் செல்லவில்லை; மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்; வெளிநாட்டு தலைவர்களுடன் கை குலுக்கிக் கொண்டிருந்தார்; பொதுமக்களிடையே ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தார்; தீவிர பிரசாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால் மணிப்பூர் மக்களுக்காக எந்த ஒரு துணிச்சலான நடவடிக்கையையும் பிரதமர் மோடி முன்னெடுக்கவில்லை. மணிப்பூர் மக்களுக்காக நான் இருக்கிறேன் என்று பிரதமர் மோடி சொல்லவும் இல்லை.

ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும், இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது; மணிப்பூருக்குள் வெளியே இருந்து யாருமே செல்ல அனுமதிக்கப்படவும் இல்லை. அங்கே இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன; மின்சாரம் இல்லை; உணவு இல்லை; பலாத்கார கொடூரங்கள் நிகழ்ந்த பின்னர் 14 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்கிற பேரவலம் அங்கே நிகழ்ந்தது. ஆனால் இப்போது மணிப்பூர் மாநிலதின் மறுவாழ்வு முகாம்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கிறீர்கள்.. கூடுதல் நிதியாக ரூ.500 கோடி அறிவிக்கின்றீர்கள்.. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 7,000 வீடுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.. ஆனால் இந்த நிதி அனைத்தும், தீக்கிரையாக்கப்பட்டு வீடுகளில் வசித்த மக்கள் இழந்த வாழ்க்கையை மீட்டெடுத்து தந்துவிடுமா? ரத்த வெள்ளத்திலேயே கொடூரமாக கொல்லப்பட்ட அந்த மக்களின் பேரன்புக்குரிய உறவுகளின் உயிர்களைத்தான் திரும்பவும் கொடுத்து விடுமா? தங்களது சொந்த மண்ணில் காடையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச்செல்லப்பட்ட போது எதிர்கொண்ட வலியின் ரணத்தைத்தான் இந்த நிதி ஆற்றிவிடுமா?

மணிப்பூரில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்; தங்களது சொத்துகளையும் வாழ்வையும் தொலைத்துள்ளனர்; ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிதியானது அந்த மக்களுக்கு போதுமானதாக இருக்காது. மணிப்பூர் வன்முறைகளில் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர் – வெறும் 36 மணிநேரத்தில் மட்டுமே 249 தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. – மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. – மணிப்பூர் மாநிலத்தில் இதுவரையில் ஏற்பட்டிருக்கும் சேத மதிப்பு ரூ20,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி என்பது மிகவும் சொற்பமானதுதான். மணிப்பூர் எதிர்கொள்ளும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஒன்றிய அரசு முகம் கொடுத்து தீர்வு காண வேண்டும்.

பொய்யான பெருமிதங்களால், சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுவதால் மட்டுமே மணிப்பூர் மக்களின் காயங்களை ஆற்றிவிட முடியாது. மணிப்பூரில் உண்மையான அமைதி உருவாக வேண்டும் எனில் மணிப்பூர் மக்களின் வலியின் குரலை வேதனையின் குரலை ஒன்றிய அரசு கேட்க வேண்டும். அதுவும் மூடப்பட்ட அறைகளிலோ, அதிகாரிகளின் அறிக்கைகளோ இந்த குரல்களை வேதனையை மத்திய அரசு கேட்டுவிட்டு சும்மா இருக்கக் கூடாது.. மணிப்பூர் மண்ணுக்கு சென்று அந்த மக்களின் குரலை கேட்க வேண்டும். மணிப்பூரின் தெருக்களைப் பார்வையிட்டு அவர்களது வீடுகளைப் பார்வையிட்டு அவர்களது துயரங்களைக் கேட்டு தெரிய வேண்டும்.. அந்த மக்களின் கண்ணீரை கவனியுங்கள்.. அவர்களின் ஆதங்கத்தையும் குமுறலையும் கேளுங்கள்.. உண்மையை கண்டறியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு அனைத்தும் புரியும்.

அங்கே நடந்திருப்பது மணிப்பூர் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மட்டுமே அல்ல.. மனிதாபிமானத்துக்ககு எதிரான குற்றங்கள்- இந்த தேசத்தின் கட்டமைப்புக்கு எதிரான குற்றங்கள். பச்சோ என்று முழங்கிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.. மணிப்பூரின் பிள்ளைகள் கொடூரமாக தாக்கப்படும் போது, பலாத்காரம் செய்யப்படும் போதும், சித்திரவதை செய்யப்படும்போதும் உங்கள் மவுனத்தனம் அநீதியானது. இது ஏதோ ஒரு மணிப்பூர் பெண்ணின் வாழ்வு அல்ல.. ஏதோ ஒரு மாநிலத்தின் துயரம் இல்லை.. இந்திய ஆன்மாவில் அகற்றமுடியாத கறையாக மணிப்பூர் வன்முறைகள் படிந்துவிட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூபாய் இலச்சினையைக் குறிப்பிடும் வகையில் ரூ எழுத்தை பயன்படுத்துவது தொடர்பாக நிதி அமைச்சர் இங்கே பற்றி பேசினார். ரூபாய் இலச்சினைக்கு ரூ என்ற எழுத்தை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆகையால் மணிப்பூர் மக்கள் மீண்டு எழுந்து இயல்பு வாழ்வு திரும்புவதற்கு நிதி அமைச்சர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திமுக எம்பி வில்சன் பேசினார்.