தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தினமும் கைது செய்து கொண்டிருக்கிறது; இந்திய அரசு இதுவரை என்னதான் செய்தது? இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் வரி கட்டுகின்றனர்; அந்த மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு என்னதான் செய்துள்ளது? தமிழ்நாட்டு மீனவர்கள் அனாதைகளா என்ன? என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ராஜ்யசபாவில் இன்று வைகோ பேசியதாவது:-
கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 843 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 43 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை அவர்களால் கட்ட இயலவில்லை. இதனால் அந்த மீனவர்களுக்கு மீண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல மனார் வளைகுடாவில் மீன்பிடித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களது படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கடந்த பிப்ரவரி 19-ந் தேதி மீண்டும் 42 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
இலங்கை கடற்படை எங்களது மீனவர்களின் கடல் தொழிலையே சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிற போது அங்கே இந்திய கடற்படை என்னதான் செய்து கொண்டிருக்கிறது? என்னதான் நடவடிக்கை எடுத்தீர்கள்? தமிழ்நாட்டு மீனவர்களும்தான் இந்திய அரசுக்கு வரி செலுத்துகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் என்ன அனாதைகளா? 40 ஆண்டுகளாக.. 843 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் இந்த மீனவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தது?
வெளியுறவுத் துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் இலங்கையின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். ஆனாலும் மீனவர்கள் கைது நடவடிக்கை ஓயவில்லை. இப்போது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்ல இருக்கிறார்? எதற்காக மோடி இலங்கைக்கு செல்கிறார்? தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க இலங்கைக்குப் போகிறாரா மோடி? இன்றைக்கும் கூட ராமேஸ்வரம்- தங்கச்சி மட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மீனவ பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பலமுறை கடிதம் அனுப்பியும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் இந்த கடிதங்கள் அனைத்தையும் குப்பை கூடையில் தூக்கி வீசிவிட்டனரே.. தமிழ்நாட்டு மக்களை டெல்லி அரசு- இந்திய அரசு ஏமாற்றுகிறது- வஞ்சிக்கிறது.
ஆகையால் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்லக் கூடாது; இலங்கை தலைவர்களை இந்தியாவுக்கு அழைக்க வேண்டும்; இத்தனை முறை தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கி இருக்கிற இலங்கை கடற்படைக்கு எதிராக ஒரே ஒரு முறையாவது இந்திய கடற்படை பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறதா? இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்திய அரசின் இந்த வஞ்சகத்தால் தமிழக மக்கள் அனைவரும் காயப்பட்டுள்ளனர். இவ்வாறு வைகோ பேசினார்.
வைகோவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் என கருதுகிறேன். அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில், அது உண்மையல்ல. நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை, இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா?
இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே, இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும், பிரதமரும் உதவி இருக்கிறார்கள். வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரை கோருகிறேன்” என குறிப்பிட்டார்.
இதையடுத்து அவையை நடத்தி வந்த துணை தலைவர் ஹரிவன்ஷ், வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்க உத்தரவிட்டார்.