“நான் பேச வருவதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. நான் தகராறு செய்யவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை. அதிமுகவை காப்பாற்ற அமைச்சர் சேகர்பாபு என் மீது குற்றம்சாட்டினார்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி வழங்க வேண்டுகோள் வைத்தார். மேலும், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்தும் பேசினார். அவரது கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் ஆவேசமான வேல்முருகன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று முழக்கமிட்டார். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவை விதிகளை மீறி செயல்படுகிறார். சபாநாயகருக்கு மிரட்டல் விடுக்கிறார். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு தவாக உறுப்பினராகவே இன்று வரை மதிப்பளிக்கப்படுகிறது. வேல்முருகன் இப்படி நடந்துகொண்டது அதிகப்பிரசங்கித்தனத்தனம் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, எழுந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், “சட்டப்பேரவையில் தவாக தலைவர் வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. இடத்தை விட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது முறையல்ல. வேல்முருகனின் மீது, சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை அமைய வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சட்டசபையில் இருந்து வெளியேறிய வேல்முருகன் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. முதல்வர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டது வருத்தம் அளிக்கிறது. நான் தகராறு செய்யவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை.
அதிமுகவில் இருந்து வந்த அமைச்சர் சேகர்பாபு அதிமுகவை காப்பாற்ற என் மீது குற்றம்சாட்டினார். சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்று பேச அனுமதி கொடுங்கள் என கேட்டது தவறா? பேசுவதற்கு அனுமதி கேட்ட என்னை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசினார். அமைச்சர் சேகர்பாபு தவறான தகவலை, முதலமைச்சருக்கு சொல்லி உள்ளார்; அதனை அப்படியே முதலமைச்சர் தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது; சேகர்பாபு அதிமுகவை காப்பாற்றுவதற்காக என்னை விமர்சனம் செய்கிறார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.