முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள எல்லையை முற்றுகையிட விவசாயிகள் பேரணியாக கிளம்பினர். போலீஸார் இவர்களை தமிழக எல்லை அருகில் தடுத்து நிறுத்தினர்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகளையும் தொழில் நுட்ப வல்லுநர்களையும் உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர் அணையை ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், இக்குழுவின் கவனத்துக்கு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையிலும், கேரளாவின் ஆதிக்கத்தை கண்டித்தும் தமிழக விவசாயிகள் பேரணியாக கிளம்பினர்.
தமிழக எல்லை அருகே லோயர்கேம்ப் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய விவசாயிகள் கேரள எல்லையை முற்றுகையிடச் சென்றனர். பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் மற்றும் தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ்மந்திரி, மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கேரளாவை நோக்கி குமுளி மலைச்சாலை வழியே விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள காவல் சோதனைச் சாவடி அருகே விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றனர். இவர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தாமதமின்றி நடத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும். கேரள நீர்ப்பாசன துறையினர் பெரியாறு அணையை விட்டு வெளியேற வேண்டும், அணை மறு ஒப்பந்த நகலை காட்சிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வர்த்தக சங்க கம்பம் நகர தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.