அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்ததுறை தொடர்ந்த வழக்கில் பதில் தர அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் அகஸ்டீன் ஜார்ஜ் மஷி ஆகியோர் அமர்வு, அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா என்பதை தெரிவிக்க கூறியிருந்தோம். ஆனால் தொடர்ந்து பதிலளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதற்காக சலுகையாக எடுத்துக் கொள்வீர்களா? இந்த வழக்கில் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னவாயின என கேள்வி எழுப்பியிருந்ததனர். அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க 10 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அதற்கு மேல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிதத்தால் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த நாளே அவர் தமிழ்நாடு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். இது கடும் விமர்சனத்திற்குள்ளானது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்தும் அவர் அமைச்சரானதை எதிர்த்தும் வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிகாரமிக்க அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி அமர்ந்துள்ளதால் அவரது பதவியால் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம். அவருக்கு எதிராக சாட்சி சொல்ல அச்சப்படுவார்கள் என்பதால் அவருடைய ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வித்யா குமார் கோரியிருந்தார்.

அமலாக்கத்துறை சார்பிலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது கடந்த முறை, செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம், அதற்குள் ஏன் அமைச்சர் பதவியை ஏற்றார், அவர் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என கேள்வி எழுப்பி, அதற்கான பதிலை தருமாறு கேட்டிருந்தனர். ஆனால் இது நாள் வரை அவர் எந்த பதிலும் அளிக்காததால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.