திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பும் யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக சென்னை, எழும்பூரில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அண்ணாமலை பேசியதாவது:-
சிறுபான்மை மக்களுக்காக பாஜக செய்ததை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். ஆனால் பாஜகவை சிறுபான்மை மக்களின் எதிரி என சொல்லும் திமுக, என்ன செய்தார்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 31 சதவீதம், முத்ரா கடன் திட்டத்தில் 36 சதவீதம், விவசாய கவுரவ நிதி திட்டத்தில் 33 சதவீதம், உஜ்வாலா திட்டத்தில் 37 சதவீத முஸ்லீம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
எனவே, ஒரு 10 நிமிடம் மனதை திறந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், சிறுபான்மை மக்களுக்கு எங்காவது ஒரு இடத்தில் பாஜகவினர் எதிரியாக இருந்திருக்கிறார்களா என சிந்தித்து பார்க்க வேண்டும். இந்திய வரைபடத்தில் மணிப்பூர் எங்கு இருக்கிறது எனத் தெரியாத முதல்வர், அங்கு நடந்ததற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். இந்தியாவில் எங்கு என்ன நடந்தாலும் பிரதமர் மீது பழிபோடும் வேலையை முதல்வர் செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
உள்துறை அமைச்சருடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்திப்பு குறித்து அரசியல் கணக்கு எதுவுமில்லை. வரும் காலத்தில் திமுகவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர். அந்த வகையில் நாங்கள் ஓரணியில் திரண்டு நிற்கிறோம். அந்த ஒற்றை கோட்டில் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை.
இஃப்தார் நோன்பு திறப்பு விழாவை பாஜக எப்படி நடத்தலாம் என முதல்வர் பேசலாமா. திமுக மட்டுமே நோன்பு திறப்பு விழா நடத்த வேண்டும் என யாரும் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்களா. முஸ்லிம்கள் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றிருப்பதை பார்த்து முதல்வர் பொறாமைப்படுகிறார். தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. தீவிரவாத சம்பவத்தை தவிர்த்து பிற வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றிருப்பவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. மத அடிப்படையில் சிறைக் கைதிகளை பாஜக பார்ப்பதில்லை.
பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக எதாவது சொல்ல வேண்டும் என்றால் அந்த நேரத்தில் நானே அறிவிப்பேன். ஆனால், இன்று அதுபோல எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இன்று நடக்கும் எந்தவொரு சந்திப்பையும் முடிச்சுப்போட்டும் கணக்குப் போட்டும் நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதிகாரப்பூர்வமாக நாட்டின் உள் துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். சட்ட ஒழுங்கு குறித்துப் பேச வேண்டும் என ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் நேரம் கேட்டால் நிச்சயம் நேரம் கொடுப்பார்கள். இதில் அரசியல் கணக்கு எதுவும் இல்லை. அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தில் பாஜகவும் என்டிஏ கூட்டணியும் வளர்ந்து வருகிறது. எங்கள் அனைவரின் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். அதுதான் அனைவரின் விருப்பம். என்டிஏ கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கம் தான் இருக்கிறார்கள். கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். நாம் யாரையும் வேண்டாம் எனச் சொல்லப் போவது இல்லை. அதிகாரப்பூர்வமாக யார் வேண்டுமானாலும் உள் துறை அமைச்சரைச் சந்திக்கலாம். அவரும் யாரையும் வேண்டாம் எனச் சொல்லப் போவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக நோன்பு திறப்பு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்எல்ஏ பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, தமாகா மாநில பொதுச்செயலாளர் முனவர் பாஷா, துணைத் தலைவர் விடியல் சேகர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், தென்னிந்திய பார்வார்டு பிளாக் தலைவர் கே.சி.திருமாறன், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா, நோன்பு திறப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி, செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.