‘பெண்ணின் மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் நாடாவை பிடித்திழுப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், அந்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மேலும் அக்கூற்று முழுவதும் உணர்ச்சியற்ற, மனிதாபிமானம் இல்லாத அணுகுமுறையை சித்தரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பாலியல் வன்கொடுமை குறித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை இந்தியாவின் பெண்கள் (We the Women of India) என்ற அமைப்பினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து, அது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கினை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் கூறும்போது, சாதாரணமான சூழ்நிலையில், இதேபோன்ற விசயத்தில் நாங்கள் யோசித்து மெதுவாகவே தடை வழங்குவோம். நாங்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆராய்ந்தோம். சட்டவிரோதம் குறித்த, குறிப்பாக பத்திகள் 21, 24 மற்றும் 26 ஆகியவை சட்ட நீதி இதுவரை அறியாத ஒன்று, அது தீர்ப்பினை எழுதியவரின் உணர்ச்சி இல்லாத மனிதாபிமானம் இல்லாத அணுகுமுறையை சித்தரிக்கிறது எனக் கூறுவதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கு தடைவிதிக்க விரும்புகிறோம்.
இந்தத் தீர்ப்பு, நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தவுடன் அப்போதே வழங்கப்பட்டதாக தெரியவில்லை. விசாரணைகள் முடிந்த பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளது. நான்கு மாதங்களுக்கு பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ஒரு முடிவுக்கு வந்த பின்பே தனது தீர்ப்பினை வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட இந்த வழக்கில் மத்திய அரசு, உத்தரப் பிரதேச அரசு, உயர்நீதிமன்றத்தின் வழக்கில் இருந்த வாதி, பிரதிவாதிகள் பதில் அளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தடையுத்தரவு குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவிக்க வேண்டும். உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இரண்டு வாரங்களுக்கு பின்பு இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, “உயர் நீதிமன்றத்தின் இந்த ஒரு தீர்ப்பை நான் ஒரு விதிவிலக்காக எடுத்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் அங்கு பட்டியலிடப்படும் வழக்குகளின் தலைவர், இதில் சில நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் நல்லது” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியும் ஆஜரானார்.
விசாரணையின் போது, ஆஜரான ஒரு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தாமாக முன்வந்து தொடர்ந்த இந்த வழக்குடன் அந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அமர்வு தெரிவித்திருந்தது.
முன்னதாக, உத்தப் பிரதேசத்தில் போக்சோ வழக்கு ஒன்றில் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கடந்த 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது, பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுக்கு போதுமானது அல்ல” என்று தீர்ப்பளித்திருந்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகள் இத்தீர்ப்புக்கு கண்டம் தெரிவித்திருந்தன.