திமுக கழுத்தை பிடித்து தள்ளினாலும் காங்கிரஸ் போக மறுக்குது: அண்ணாமலை!

கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுவாக திமுகவை மட்டுமே மையப்பொருளாக வைத்து பேசியும் அரசியல் செய்தும் வந்த அண்ணாமலை இன்று காங்கிரஸ் கட்சியை சீண்டியிருக்கிறார். இதற்கு காரணம் நேற்றைய தினம் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை தான், அதில் அண்ணாமலை உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் பாஜக மீதான வெறுப்பு குறையாது என கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியது தான் காங்கிரஸ் மீதான அண்ணாமலையின் அட்டாக்கிற்கு காரணமாகும்.

சென்னையில் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவை அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் வாழ்த்த வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோம். மகாராஷ்டிராவில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானது போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்லி உள்ளேன். ஏக்நாத் ஷிண்டேவை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் கூறவில்லை. குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாரதிய ஜனதா கட்சி எந்த தனிமனிதனையும் நம்பி இல்லை. புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாவார்கள். அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது. அதற்கான பெவிகுயிக்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐ.சி.யூ.விலேயே உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளது. தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பா.ஜனதா கட்சி பெறும். இதனை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், “திருவண்ணாமலையில் போலீசார் அடக்குமுறையில் பழங்குடியின பெண்களும், குழந்தைகளும் அடித்து விரட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் பழங்குடி இனத்தவரான குரும்பர் மக்கள் கூட்டமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆதிவாசிகளுக்கான எஸ்.டி., பிரிவில் ஜாதி சான்று கேட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். போலீசார் அடக்குமுறையில் பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் அடித்து விரட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறும்பா, குறும்பர், குரும்பன்ஸ், குருமன் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இடப்பெயர்ச்சி செய்யும் இனத்தவரான அவர்களை, பழங்குடியின பட்டியல் இனத்தவராக அங்கீகரித்து, ஜாதி சான்று வழங்க பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திருவண்ணாமலையில் மட்டும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான குரும்பர் இனத்தவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் பட்டியலின பழங்குடி இனத்தவருக்கான சலுகைகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜூலை 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின், திருவண்ணாமலை வர உள்ள நிலையில், அங்கிருக்கும் மக்களின் குறைகளை பரிவோடு கேட்காமல், பெண்கள், குழந்தைகளை தாக்கி, அரசு எடுத்த கைது நடவடிக்கை எந்த வகையான சமூக நீதி? அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி மக்கள் மீது, அடக்குமுறையை ஏவி விட்ட அதிகார அத்துமீறலை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.