மாநிலங்களவை எம்.பி.யாக தன்னை நியமனம் செய்த பிரதமர் நரேந்திரமோடிக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இசை கச்சேரியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இளையராஜா அங்கிருந்தபடி வாழ்த்து சொன்னவர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து உள்ளார். பிரதமருக்கு நன்றி இதுகுறித்து டுவிட்டரில் இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ‘
“என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கவுரவமான அங்கீகாரத்திற்காக பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை, கலாசாரத்தின் அழகை நமது சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்க கிடைத்துள்ள பெரிய வாய்ப்பாக இதனை கருதுகிறேன். இந்திய அரசு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் இசை மற்றும் கலையை ஆர்வமாகவும், தொழிலாகவும் செய்ய இளைஞர்களை தூண்டுவதாக அமையும்” என்று கூறியுள்ளார்.