அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசயா சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் காமராஜின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடைபெற்றுள்ளது. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடைபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜூன் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மன்னார்குடியில் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடத்தி வரும் நிலையில் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். இந்த நிகழ்வுகளால் மன்னார்குடியில் காமராஜ் வீட்டின் முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளனர்.