பிரபல ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின், பிரதமர் மோடி குறித்த சர்ச்சை டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை, தமது ‘காளி’ ஆவணப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் காளி வேடமிட்டிருந்த பெண், ஒரு கையில் சூலமும், மறு கையில் சிகரெட் புகைப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த போஸ்டர் இந்து மத கடவுளை அவமதிப்பது போன்று உள்ளதாக கூறி, பல்வேறு அமைப்புகள் லீனா மணிமேகலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சர்ச்சை போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலை மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது, கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து கடந்த 2013 இல் லீனா மணிமேகலை வெளியிட்ட டுவிட்டர் பதிவு, காளி போஸ்டர் சர்ச்சையை அடுத்து தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 2013 செப்டம்பர் 13 ஆம் தேதி , பகிரப்பட்டுள்ள அந்த பதிவில், “மோடியின் இந்த நாட்டின் பிரதமராக வந்தால், எனது ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு என அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைத்து விடுவேன். ஏன் எனக்கு இந்திய குடியுரிமையும் வேண்டாம் என்று சொல்லி விடுவேன். இது சத்தியம்!” என்று அவர் மிகவும் ஆவேசமாக கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவு கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காளி போஸ்டர் சர்ச்சையை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அசோக் பாண்டே எனும் சினிமா இயக்குநர் லீனாவின் இந்த பதிவை குறிப்பிட்டு, “நீங்கள் முன்பு செய்திருந்த சத்தியத்தை நிறைவேற்றவில்லை” என்று கிண்டல் செய்துள்ளார். அதாவது. மோடி பிரதமராகிவிட்டார். அதனால் நீங்கள் சத்தியம் செய்தபடி, உங்கள் இந்திய குடியுரிமையை எப்போது திரும்ப தர போகிறீர்கள்? என்று அசோக் பாண்டே மறைமுகமாக கேட்டுள்ளார்.