பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது!

நடிகர் பிரசாந்த் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த இனிய நாளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

2002ஆம் ஆண்டு ஹரி – பிரசாந்த் காம்பினேஷனில் உருவான படம் தமிழ். இப்படத்தின் மூலம் ஹரி இயக்குநராக அறிமுகம் ஆனார். பிரசாந்த் ஆக்சன் அவதாரம் எடுத்த முதல் படமும் இதுதான். இதுவரை காதல் கதை சார்ந்து நடித்து வந்த பிரசாந்த் தமிழ் படத்தில் ரவுடிகளை ஓடவிடும் நடிகராக மாறினார். இப்படத்தில் பிரசாந்துக்கு பிடித்த நடிகை சிம்ரன் ஜோடியாக நடித்தார். வடிவேலு – பிரசாந்த் காம்போவில் உருவான காமெடியும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து குடும்ப சிக்கல்களில் தவித்த பிரசாந்த் அடுத்தடுத்து படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டன. இதன் பிறகு வின்னர் மிகப்பெரிய ஹிட் படமாக பிரசாந்திற்கு அமைந்தது. இன்றைக்கும் இப்படத்தின் காமெடிகளை வீடியோ மூலம் ரசிகர்கள் ரீல்ஸ் பதிவிட்டு ரசிக்கின்றனர்.

பிரசாந்தை வைத்து இயக்கி ஹிட் இயக்குநராக மாறிய ஹரி, சாமி, அருள், தாமிரபரணி, பூஜை, சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியால் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். ஹரி இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு புல் கேரண்டி என்ற நம்பிக்கயையும் பெற்றார். சிங்கம் படம் வெளியான சமயத்தில் இயக்குநர் ஹரி அளித்த பேட்டியில், என் படங்கள் மீல்ஸ் சாப்பிடுவது போன்று இருக்கும். ஓரு உணவகத்திற்கு சாப்பிட சென்றால் அதில் சாப்பாடு, கூட்டு , சாம்பார், மீன், கறி அனைத்து வகை உணவுகளை விரும்பி சாப்பிட வேண்டும். அந்த திருப்தியை தர வேண்டும். அதேபோன்று தான் நான் படங்களை இயக்குகிறேன்” என தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பிரசாந்தின் 52ஆவது பிறந்தநாளான இன்று ஹரி – பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பிரசாந்தின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது பேசிய நடிகர் பிரசாந்த், தமிழ் படத்தின் மூலம் ஹரி சார் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதே பார்மெட்டில் இப்போதும் அவர் உறுதியுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 23 ஆண்டுக்கு பிறகு நானும் ஹரி சாரும் இணைந்து பணியாற்ற போகிறோம் என்பது பெரும் மகிழ்ச்சி என பிரசாந்த் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், உறுதியாக தெரிவிக்கிறேன். இந்தப் படம் எல்லா ஜெனரேஷனுக்கும் பிடித்த படமா இருக்கும். நீங்கள் சொல்கின்ற 80ஸ், 90ஸ் 2கே கிட்ஸ்களையும் தாண்டி கொண்டாடுவார்கள். அந்த மாதிரியான கதையைத்தான் ஹரி சார் எழுதியிருக்கிறார். தியேட்டருக்கு வந்து நீங்க பீல் குட் படம் சொல்ற மாதிரி இருக்கும் என பிரசாந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த பிறந்த நாளில் எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் என் அப்பாவுக்கு மகனாக நான் பிறந்தது என உருக்கமாக பிரசாந்த் பேசியிருந்தார். பின்பு பேசிய அவர், இன்று வரை என் படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் உயிரினும் மேலான ரசிகர்களால் நான் இந்த இடத்தில் நிற்கிறேன். இவர்கள் இன்று வரை எனக்கு சப்போர்ட் செய்வது ஆச்சர்யத்தை அளிக்கிறது என்றும் பிரசாந்த் கூறினார். பிரசாந்த் கரியரில் ஹரி கூட்டணியில் உருவாகும் இப்படம் 55ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.