பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

பாம்பன் – மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தியாவுடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபம் கடற்கரையிலிருந்து, பாம்பன் கடற்கரை வரையிலும் கடலில் ரயில் பாலமும் அதன் நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலம் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 24.02.1914ல் திறக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் நீளமான கடல் பாலம் ஆகும்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்ததாலும், இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 2019 ஆண்டு ரயில்வே மானியக் கோரிக்கைகளின் போது பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர் 11.08.2019ல் பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின.

ரயில்வே நிர்வாகம் 31.09.2021-க்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும் கரோனா பரவலால் நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 2021 -குள் பணிகளை முடிக்க முடியவில்லை, செப்டம்பர் 2024-ல் பணிகள் நிறைவடைந்தது.

ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கொடி அசைத்து வைத்து திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேசுவரத்கு சென்றார்.

பின்னர் ரிமோட் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்துசாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார்.