வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்: மு.க.ஸ்டாலின்!

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர், ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.494 கோடியே 51 லட்சம் செலவில் 1,703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.130 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலான 56 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102 கோடியே 17 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 15,634 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, ஊட்டி எம்எல்ஏ ஆர்.கணேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-

நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தான் நீட் தேர்வை அனுமதித்தனர். கூட்டணியில் இருந்தபோதும், தேர்தலைச் சந்தித்த போதும், அப்போது நீட் தேர்வு விலக்கு வேண்டும் என ஏன் பாஜகவிடம் கேட்கவில்லை. ராகுல்காந்தி மூலமாக, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என நாங்கள் சொல்ல வைத்தோம். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா?

உதகை விழாவில் பங்கேற்பதால் ராமேஸ்வரம் பாம்பனில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பும் விழாவிற்கு செல்லவில்லை. பிரதமர் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். இந்தி திணிப்பு மற்றும் சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. வக்பு திருத்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி அவர்களே.. தமிழ்நாட்டு மண்ணில் நின்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் வாக்குறுதி அளிக்க வேண்டும்.

வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக எம்.பிக்கள் பேசினர். மக்களவையில் ஆ.ராசா நெருப்பு பறக்கப் பேசினார். ஆனால், அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டும் பேசினார். ஆனால், எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா என சொல்லவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி, வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடரப்படும்.

பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு செல்கிறது. பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்க்கல்வி சேர்க்கை விகித்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சங்ககாலம் தொட்டு, குடியாட்சி காலத்திலும் கோலோச்சும் தமிழகத்தை எத்தகைய அரசியல் சூழ்ச்சியாலும் வீழ்த்த முடியாது. அதனை விட மாட்டேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.