நான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை: வேல்முருகன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து தவாக தலைவர் வேல்முருகன், நிர்மலா சீதாராமனை சந்தித்தேன் என்று தகவல் பொய்யானது. நிர்மலா சீதாராமனை சந்திக்க எந்த அவசியமும் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

அண்மையில் சட்டசபையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் நடவடிக்கையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டென்ஷனானார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி விலக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது. தவாக தலைவர் வேல்முருகன் மட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாதக தலைவர் சீமான் உள்ளிட்டோர் சந்தித்ததாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

நான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. அதற்கான எந்த அவசியமும் இல்லை. அது முழுக்க முழுக்க தவறான தகவல். கொள்கை விரோதியாக இருக்கும் பாஜகவின் முக்கிய தலைவரை சந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் எனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். ஏற்கனவே கூறியதை போல், நான் இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறேன். ஒரு காலத்திலும் மனித குல விரோத நடவடிக்கையில் ஈடுபடும், தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் மதவாத பாஜக அரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகளே இல்லை. இதனை ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளேன்.

இப்படியான சூழலில் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன் என்று தகவல் பரப்பப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று அயராது முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். தவாகவை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள். இதனை அவர்களால் தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.