கச்சத்தீவு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை: செல்வப்பெருந்தகை!

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு பற்றி ஒரு வார்த்தை கூட இலங்கை அதிபரிடம் பேசவில்லை. இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிக முக்கிய தேவையான கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை அலட்சியம் செய்துள்ள பிரதமர் மோடி, இந்த முக்கிய பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் எதுவும் பேசாமல் திரும்பியுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளான பின், இந்தியாவின் நிதி உதவிகள், இதர உதவிகளை நம்பியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் கச்ச தீவு மீட்பு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகின. ஆனால் மோடி அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள இன்று வரை மறுத்து வருகிறது. இது தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது. தமிழகம் இருக்கும் இடத்தில் குஜராத்தும், குஜராத்திகளும் இருந்து, குஜராத் மீனவர்கள் இதே போல பாதிக்கப்பட்டிருந்தால், மோடி இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.

இன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார். புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது ஆகியவற்றை மறைத்து விட்டு, தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது இயல்பு. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) அடிப்படையில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விகிதம், மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழத்திற்கு அளிக்கப்படும் விகிதம் போன்ற விகிதங்களை ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.

புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் ரூ.36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் ரூ.226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2028 கோடி செலவு செய்திருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது. இந்த உண்மைகளை பிரமர் மோடி ஏன் பேசவில்லை ? இந்த ஏமாற்று வேலைகள், பொய்கள், துரோகங்களுக்காக பாஜகவிற்கும், மோடிக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.