தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் ஸ்டாலின்!

“தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர் நலன் தொடர்பாக, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110-ன்கீழ் அறிவித்து பேசியதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, கடந்த ஏப்.2ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தோம். இலங்கை சென்றிருந்த பிரதமர் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதிலே குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீர்மானத்தை பிரதமருக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.

இந்த நிலையில், பிரதமர் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். மத்திய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம்.

திமுக அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். மீனவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தல், அவர்களது மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன்பிடிப்பிற்குச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களைக் களைவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும்கூட, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும், அந்தப் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதுமான செயல்கள் நம்முடைய தொடர் வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் மீறி நடைபெற்று வருகிறது. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

* மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.

* 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் பகுதியிலும் மற்றும் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் குந்துக்கல் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன்.

இவற்றைத் தவிர, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களையும் செயல்படுத்திட பின்வரும் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கின்றேன்:

* கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7000 பயனாளிகளுக்கு 52 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள 25 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் உபகரணங்கள் வழங்கி, தொடர்பணிகளும் மேற்கொள்ளப்படும்.

* மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமார் 2,500 மீனவக் குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* சுமார் 15 ஆயிரத்து 300 மீனவர்களுக்கு, மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட 20 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமானத் தொழில் படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள்
தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல்சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய 54 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மீன் வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர, குறிப்பாக, காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய சுமார் 14 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு, 53 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசின் மீன்வளத் துறை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளும், அரசு துறைகளும் இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்தும். இந்தத் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் திட்டச் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து மேம்படுத்தும் பொருட்டு, இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் 360 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 216 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

மொத்தம் 576 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதியைச் சார்ந்த மாவட்டங்களின் மீனவர்கள் பெரிதும் பயனடைவார்கள், அவர்களுடைய வாழ்வாதாமும் மேம்படும். அதுமட்டுமல்ல, நமது மீனவ சகோதரர்களின் குடும்பத்தினர் கூடுதல் வாய்ப்புகள் பெற்று, அதிகமான பொருளீட்ட வழிவகை ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.