திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்தும் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழலை குறிக்கும் வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடருக்கு அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் யார் அந்த தியாகி என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வருகை தந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழல் குறித்து அவர்கள் விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். அதற்கு அனுமதி தராததால் அதிமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து அவர்களை ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவிட்ட சபாநாயகர் அவையில் இருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அதிமுக அதற்கு பிறகு பொறுப்பேற்றவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். தங்கள் சிக்கி இருக்க கூடிய பல்வேறு வழக்குகள் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக யார் காலில் போய் விழுந்தார்களோ. அவ்வாறு விழுந்த நேரத்தில் அதனை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன அதிமுக தொண்டர்கள் தான் இன்று தியாகிகள் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள் தான் தியாகிகள் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
யார்_அந்த_தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத திரு. மு.க.ஸ்டாலின், சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார். சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும். உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு, தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?
இவ்வளவு ஏன், கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும், நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம் – கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும், திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள். ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறதே- அந்த ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார் என்று தான் கேட்கிறோம். அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த நீங்கள் தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே! யார்_அந்த_தியாகி? உங்கள் பதிலுக்கு மக்களுடன் இணைந்து காத்திருக்கிறோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.