சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நமது நாடு, ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60 சதவீதம், இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 385 டாலராக இருந்தது, 2025 பிப்ரவரியில், 629 டாலராக, 62 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.200 விலை குறைக்கப்பட்டது. மேலும் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ரூ.100 விலை குறைப்பு செய்யப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை. கடந்த 2024-ம் ஆண்டு முழுவதுமே, சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ரூ.803 ஆகவே இருந்தது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ரூ.503 ஆகவே இருந்து வருகிறது.
உண்மை இப்படி இருக்க, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி எண் 503-ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அதனைப் பற்றி நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட பேசாமல், தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.