உச்சநீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்த செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை வழக்கில், ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்றதால், அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த பத்திரத்தில், ‘உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ஜாமின் நிபந்தனைகளை நான் மீறவில்லை என்றும், அவ்வாறு மீறியதாக மனுதாரர் எந்த ஆதாரத்தையும் கூறவில்லை என்றும், என் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும், எந்த சாட்சியையும் நான் அச்சுறுத்தவில்லை. யாரோ ஒருவரின் வற்புறுத்தலில், வழக்கிற்கு தொடர்பில்லாத ஒருவரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், மனுதாரரின் மனுவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும்’ செந்தில் பாலாஜி தரப்பில் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பிரமாணப் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவு பிறப்பிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்கக வேண்டும்.

முன்னதாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத பண பரிவர்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும். சார்ட்சிகள் முறையாக விசாரிக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை வாதங்களை முன் வைத்தது.

கடந்த முறை கூடிய அமர்வில் “அமைச்சர் பதவியில் ஏன் நீடிக்கிறீர்கள்” என செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். ஏற்கெனவே 3 முறை வழக்கு விசாரணைக்கு வந்த பிறகும் நோட்டீஸை காரணம் காட்டி பதில் மனுதாக்கல் செய்யாமல் இருப்பது ஏன். ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் 10 நாட்களுக்கு பதில் தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 8ஆம் தேதி தாக்கல் செயப்பட்ட வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸ் வரவில்லை என்ற செந்தில் பாலாஜி தரப்பு கூறியதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ஒரு அமர்வை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல; ஒவ்வொரு அமர்விலும் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு மீது 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட்டாது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.