மக்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும்: சீமான்!

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், அவர்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறியதாவது:-

கச்சா பொருட்களின் விலை குறையும் பொழுது பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருள்கள் விலை குறைய வேண்டும். ஆனால் அவை உயர்த்தப்படுவது என்பது நிர்வாகம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். கேஸ் விலையை ரூ.50 உயர்த்திருப்பது மக்களுக்கு துன்பத்தை தான் தரும்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் நானும் அண்ணாமலையும் பங்கேற்றுள்ளோம். நேற்று ஒரு கல்லூரி விழாவில் அந்த கல்லூரியின் வேந்தர் பாரிவேந்தர் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அழைத்து இருந்தார். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அதனால் நான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். அண்ணாமலையை அவர் பாஜக தலைவராவதற்கு முன்பு இருந்து எனக்கு தெரியும். அவருடைய கட்சியின் கொள்கை வேறு, என்னுடைய கட்சியின் கொள்கை வேறு. அதற்காக நானும் அவரும் அண்ணன் தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? திமுகவில் 99 சதவீதம் பேர் என்னுடைய சொந்தக்காரர்கள் தான் உள்ளார்கள். அதற்காக அவர்கள் எல்லாரிடமும் சண்டையிட்டுக் கொண்டா இருக்க முடியும். தேர்தல் நடந்து கொண்டிருந்தாலும் பாரிவேந்தர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தால் நான் செல்வேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தான் அதிகாரம் இருக்க வேண்டுமே தவிர, நியமிக்கப்படுபவர்களுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது. ஆளுநர் விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே கூறி வருகிறோம்.

விழாக்காலங்களில் நாடகங்கள், பாட்டு கச்சேரிகள் நடப்பது போலவே தேர்தல் காலங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது இது வழக்கமாகிவிட்டது. கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் திண்டுக்கலைச் சேர்ந்த மோகன் ராம், திருச்சியை சேர்ந்த சாமி ரவி ஆகியோரை இந்த வழக்கு தொடர்பாக என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் யாரையாவது கைது செய்து என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிற நிலையில் உள்ளார்கள். இது எந்த மாதிரியான சட்டம் ஒழுங்கு? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை மூன்று பேரை என்கவுண்டர் செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் அதிக வழக்குகள் என் மீது தான் உள்ளது என்கிற பெருமை எனக்குள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை பேசப்படுவதே இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் அவர்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும்.

தீமையை நன்மையை வைத்து தான் ஒழிக்க முடியும். நாங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வந்த ஆட்கள் கிடையாது, அடிப்படை மாற்றத்திற்காக செயல்படுபவர்கள். எங்களின் கொள்கை மொழி தமிழ், பயன்பாட்டு மொழி ஆங்கிலம். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி தான். எம்மொழியையும் நாங்கள் கற்போம். இவ்வாறு சீமான் கூறினார்.