கே.என். நேருவின் சகோதரரை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது. அப்போது கூடுதலாக அவருடைய சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் இல்லங்களில் சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது, கே.என்.நேருவின் தம்பி, கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.

கே.என். நேரு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்று(ஏப்ரல் 7) காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் டி.வி.ஹெச் கட்டுமான நிறுவனம் மற்றும் அந்நிறுவன ஊழியர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர், சென்னை ஆரியபுரம் – பிஷப் கார்டன் பகுதியில் அமைந்திருக்கும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனின் வீடு அமைந்து இருக்கிறது. அங்கு காலை முதல் விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கே.என்.ரவிச்சந்திரனை தனது காரில் அழைத்துச் சென்றனர். இவர் டி.வி.ஹெச் என்னும் கட்டுமான நிறுவனத்தின் சேர்மனாக இருந்து வருகிறார்.

இன்னும் சற்று நேரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அவரை அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். இந்த அமலாக்கத்துறையின் சோதனையில் ரூ.30 கோடி அளவிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ’ட்ரூ டவுன்’ என்னும் நிறுவனத்தின் மூலமாக, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ரூ.30 கோடி வரை கடன் வாங்கி, அந்தப் பணத்தை டி.வி.ஹெச். கட்டுமானம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ.வழக்குப் பதிவுசெய்து, இந்த விசாரணையானது செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கே.என். நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் இடங்களில் விசாரணை நேற்று காலை முதல் நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து தான், கே.என்.ரவிச்சந்திரனை விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.