ஆ ராசா முதல்ல 2ஜி வழக்கை முடிக்கட்டும்: தமிழிசை சவுந்தரராஜன்!

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக எம்பி ஆ ராசா வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல விசிக தலைவர் திருமாவளவன் எம்பி போராட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கிடையே இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமான பதிலை அளித்துள்ளார்.

கடந்த வாரம் மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதையும் தாண்டி இந்த மசோதை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனால் வக்பு வாரிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரும் என்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக எம்பி ஆ ராசா வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல விசிக தலைவர் திருமாவளவன் எம்பி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதற்கிடையே இது குறித்த கேள்விக்கு பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாகப் பதிலளித்துள்ளார். தமிழிசை காட்டம் இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

ஆ ராசா முதல்ல 2ஜி வழக்கை முடிக்கட்டும்.. அந்த வழக்கை இன்னும் முடியாமல் நிலுவையில் இருக்கிறது. அவர் வக்பு வாரியம் குறித்து தாராளமாக வழக்கு தொடரட்டும். ஆனால் வக்பு வாரிய திருத்த சட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்து நான் அன்றே சொல்லி இருந்தேன். தம்பிதுரை டக் அவுட் ஆனதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். நீங்கள் நாக் அவுட் ஆகப் போகிறீர்கள் என்று நான் அப்போதே கூறியிருந்தேன். இது மட்டுமில்லை முதல்வர் உட்பட திமுகவினர் பேசி பேசியே உங்களை ஒழிக்கப் போகிறார்கள். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்களும் அதையே தான் சொன்னோம். இவர்களால் பேச மட்டுமே முடியும். வேறு எதையும் செய்ய முடியாது. ஆ ராசா முதலில் அவர் வக்பு வாரியத்தில் உள்ள பிரச்சினைகளைப் படிக்கட்டும். பாமர இஸ்லாமியர்களுக்கான இடம் கூட வக்பு வாரியத்தில் மீட்டு கொடுக்கப்படும். எனவே, அதை எல்லாம் படித்துவிட்டு ஆ ராசா பேசட்டும்.

திருமாவளவன் வக்பு வாரிய திருத்தத்திற்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். அவர் போராட்டத்தை அறிவிக்காமல் இருந்தால் தான் அதிசயம். வக்பு என்ற வார்த்தையைப் பார்த்த உடனே போராட்டத்தை அறிவித்துவிட்டார் போல..! திருமாவளவனிடம் நான் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெண்கள் கூட்டமைப்பு இதை வரவேற்றுள்ளது. பல இஸ்லாமிய அமைப்புகளும் இதை நெறி முறைப்படுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது. இதில் அவர்கள் சொல்வது ஒன்றைத் தான். வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி உறுப்பினராக இருக்கலாம் என கேட்கிறார்கள். இந்து கோயில்களில் மாற்று மதத்தினர் இருக்கிறார்களே.. இது ஒரு சட்ட ரீதியான விவாதம். அனைத்தையுமே தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.