செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், கடைசி நேரத்தில் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதிஅவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே செப்டம்பர் 29 ஆம் தேதி அவர் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிராக இந்த வழக்கை செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மார்ச் 24-ம் தேதி இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “எழுத்து ரீதியாக பதில் சொல்வதற்கு எங்களுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனால், கோபமான உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, “செந்தில் பாலாஜிக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றால் கடந்த சில அமர்வுகளாக இந்த வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக நீங்கள் எப்படி ஆஜரானீர்கள்? செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா இல்லையா? அல்லது அது பற்றிய அவரது சட்ட ரீதியான விளக்கத்தை ஏப்ரல் முதல் வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தில், “உச்சநீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவில் அமைச்சராக பதவி வகிக்க தடை விதிக்கப்படவில்லை. ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை. மேலும், நான் அமைச்சரானது எந்த சட்டத்திற்கும் முரணானது அல்ல. ஒரு அமைச்சராக இந்த வழக்கில் சாட்சிகளை மிரட்டுவதாக புகார்தாரர் எந்தவிதத்திலும் நிரூபிக்கவில்லை. சாட்சிகளை இன்ஃபுளுயன்ஸ் செய்யவில்லை. யாரோ ஒருவரின் வற்பறுத்தலின் காரணமாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீனை திரும்பப் பெற அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு உகந்தது அல்ல. இதனால் இந்த மனுக்களை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த இந்த வழக்கு டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான முக்கிய வழக்கு விசாரணையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற முக்கிய வழக்குகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அமர்வு ரத்து செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கான வேறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி எஸ். அபய் ஓகா தெரிவித்தார்.