11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்: அதிமுக சரவணன்!

உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம் என அதிமுக மருத்துவரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு பயம் காரணமாக தமிழகத்தில் சில மாணவ மாணவிகள் தவறான முடிவு எடுத்துவரும் நிலையில், நீட் விலக்கு கோர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து இருக்கிறது. இந்த நிலையில் நீட் விலக்கு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் அதிமுக பாஜக பங்கேற்காத நிலையில் திமுக, பாமக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தவாக, மமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என மதுரை டாக்டர் சரவணன் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக மருத்துவரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மக்களிடம் நாடகமாடி உள்ளது. 2010 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போராடி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், வருடத்திற்கு 600 மருத்துவ மாணவர்கள் அரசு செலவில் மருத்துவம் படித்தனர். 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் 1,650 மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனும் வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. தேர்தல் நெருங்குவதால் முதலமைச்சர் நீட் தேர்வு நாடகத்தை நடத்துகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக பொதுமக்களிடம் 50 லட்சம் கையெழுத்து பெற்றது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம். ஒருபுறம் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதே நேரத்தில் நீட் தேர்விற்காக மாணவர்களை சிறப்பு பயிற்சிகள் மூலம் தயார்படுத்துவோம். நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக மாணவர்களை தயார்படுத்தும் முயற்சியிலிருந்து திமுக அரசு விலகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.