“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்; மாநிலத் தலைவர் நியமனத்திற்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை, கட்சியின் மாநிலத் தலைவர்களை அமித் ஷா சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று இரவு 10:20 மணியளவில், தனி விமானத்தில் சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை, தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சில முக்கிய தலைவர்களையும் அமித் ஷா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில், அமித்ஷா ஆர்வமாக உள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியுடன் உறுதியாக சந்திப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை கூறி இருந்தார். தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மத்திய உள்துறை அமித் ஷாவின் தமிழக வருகையின்போது புதிய மாநிலத் தலைவர் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு வருவது உறுதி, நாளை மாலை வரை தமிழ்நாட்டில் இருப்பது உறுதி. அவர் எதற்கு வருகிறார் என்பதையெல்லாம் நாளை அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம். மாநில தலைவர் நியமனத்துக்கும் அமித் ஷா வருகைக்கும் சம்பந்தம் இல்லை. 4 நாட்களுக்கு முன்பு அமித் ஷா பீகார் சென்றார். அங்கு அரசியல் தலைவர்களை சந்தித்தார். தமிழகத்திலும் அதுபோன்ற பயணமாகவே வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது பாமக தலைவர் அன்புமணி நீக்கம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது பாமகவின் உட்கட்சி விவகாரம் என்றும் இது குறித்து அவர்களே நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், “அது அவர்களின் உட்கட்சி விவகாரம். பாமக ஒரு பலமான கட்சி. வெளியே இருந்து பாஜக சார்பில் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்காது என நினைக்கிறோம். எதுவாக இருந்தாலும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இணைந்து நல்ல முடிவை எடுப்பார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவார்கள், தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.