தமிழக முதல்வரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. கல்லூரி முதல்வர் நா. ராமலட்சுமி வரவேற்றார். அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார். கடந்த வாரம் அவர் ஊட்டிக்கு வந்தார். அவர் சென்னை திரும்பியவுடன் எங்களிடம் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். மற்ற மாவட்டங்களை விட ஊட்டியில் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த அளவுக்கு மக்கள் அன்போடு இருக்கிறார்கள். கடந்த நிதிநிலை அறிக்கை தாக்களின் போது 32 மாவட்ட பிரதிநிதிகள் கல்லூரிகளை கேட்டனர். அவற்றில் முதல்வர் 10 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார், தேர்ந்தெடுத்தார். அதில் முதலாவதாக குன்னூரில் தான் கல்லூரி அமையும் என்று கூறினார்.
நேற்று வரை நீங்கள் மாணவர்கள், இன்று பட்டதாரிகள். திருமணத்தின் போது மாணவிகளுக்கு பெற்றோர் சீர்வரிசை கொடுத்து அனுப்புவார்கள். ஆனால், எத்தனை சீர்வரிசை கொடுத்தாலும் இந்த பட்டப் படிப்புக்கு இணையாகாது. இதுதான் உங்களை உயர்த்தும். ஒரு குடும்பத்தில் பெண் ஒருவர் படித்தால், அந்த சமூகம் உயரும், அதன் மூலம் நாடும் உயரும்.
இன்று பெண்கள் விண்வெளி வரை பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர். தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிக்கு திமுக அரசு கூடுதல் மதிப்பெண் கொடுத்து உயர் கல்வியில் சேர்த்தது. நான் அரசு பள்ளியில் படித்து, பட்டதாரியாகி இன்று அமைச்சராக இருக்கிறேன். ஒரு குடிசையில் பிறந்து வளர்ந்தாலும் கூட கடைக்கோடி மகனும் உயர்வான் என்பதற்கு நானே சிறந்த உதாரணம்.
உயர் கல்வித்துறையில் தமிழகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. நான் ‘முதல்வர் திட்டம்’,‘புதுமைப் பெண் திட்டம்’ போன்றவை பெண்கள் படிப்பதற்கு உறுதுணையாக உள்ளது. தமிழகத்திலேயே ஊட்டியில் தான் அதிக மாணவிகள் உதவித்தொகை பெறுகின்றனர்.
தமிழக முதல்வர் ஊட்டியில் பேசும் போது, ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்று கூறினார். அதன்படியே இப்போது வென்று காட்டியிருக்கிறார். ஆளுநருக்கு கடிவாளம் போட்டுள்ளார். ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. பட்டம் பெரும் மாணவர்கள், மேலும் மேலும் படித்து பல பட்டங்களை பெற வேண்டும். அதே நேரத்தில் நமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், பேராசிரியர்களை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு எப்போதும் நன்றி சொல்ல வேண்டும் அதேபோல் பெற்றோருக்கும் நாம் நன்றி உணர்வோடு இருந்து மரியாதை கொடுக்க வேண்டும் அவர்களை பேணி காக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.