கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றால் அமித்ஷா முன்னணியில் அவர் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். முன்னதாக வைகோ செய்தியாளர்களுடன் பேசியதாவது:-
வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டது என்றும் பாஜக தமிழ்நாட்டு தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த காரணத்தை கொண்டும் பாஜகவுடன் உடன்பாடு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அண்மையில் தான் கூறியவர், பாஜகவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து பேசினார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு சென்றார், செங்கோட்டையன் இருமுறை சென்றார். இப்போது அதிமுக தலைமையில் கூட்டணி என்கிறார்கள். இந்த அறிவிப்பின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
கூட்டணிக்கு தலைவர் என்கிற முறையில் ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், அதுதான் கூட்டணிக்கு ஆரோக்கியமானதாகவும் உண்மையான கூட்டணி அமைவதாகவும் இருந்திருக்கும். மெளன சாமியாக பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டு இருந்தார்.
தமிழ்நாட்டுக்கு சாதகமாக எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லை கருத்து வேறுபாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை. பாஜகவுக்கு எடுபிடி போல் தான் இருந்துங்கொண்டு நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்களே தவிர அதிமுக சார்பில் ஒருவர் கூட பேசவில்லை.
இந்த கூட்டணி நீடித்தாலும், உடன் சில கட்சிகள் சேர்ந்தாலும் திமுக தலைமையில் உள்ள நம் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் 234 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை முன் வைத்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மதிமுக சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் கடைசி வரை திமுகவுக்கு அரணாக இருக்கும் என்று கலைஞரிடம் நான் பேசி உள்ளேன் என்று பலமுறை சொல்லி உள்ளேன்.
நம் இயக்கத்தில் பணியாற்றிய ஒருவர் சில சூழல் காரணமாக திமுகவுக்கு சென்றார். அவரது மனைவி உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சென்றேன். அவரது வீட்டில் கலைஞர் கரம் என் கரத்தை பற்றிக் கொண்டு உள்ளதும் என் அருகில் ஸ்டாலின் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படம் ஓரிரு நாள்களில் மதிமுக அலுவலகத்தில் வைக்கப்படும். கலைஞருடன் கடைசி சந்திப்பில் நான் பேசியதற்கு அடையாளமாக அந்த புகைப்படம் உள்ளது என்றார்.
நாம் எடுத்த முடிவில் சஞ்சலம் எதுவுமில்லாமல் தெளிவாக உள்ளோம், ஆளும் அரசுக்கு எதிராக எதுவும் நாம் பேசவில்லை. இந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை மற்ற கட்சிகள் தனித்தனி கட்சிகள். நாம் திமுகவில் அங்கமாக இருந்தவர்கள். மற்ற கட்சிகள் வெளியில் இருந்து வருபவர்கள். நாம் கூட்டணியில் இருப்பதற்கும் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் 100 விதமான அர்த்தங்கள் கற்பிக்க பலர் தயாராக இருக்கும் காரணத்தால் எச்சரிக்கையுடன் நமது பங்கை இந்த கூட்டணியில் செலுத்த வேண்டும். வேறு எந்த தொழிற்சங்கத்திற்கும் செல்ல மாட்டோம், மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கத்தில் தான் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தொடர்ந்து செயல்படும் உங்களுக்கும் புதிய நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்பு தேர்தலில் மிகப்பெரிய அளவில் இருக்கும். நீங்கள் லட்சியவாதிகள் கொள்கைக்காக பாடுபடுபவர்கள். அந்த வகையில் தொழிலாளர் தோழர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும் என்று அன்போடு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.