பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

‘சமூகநீதி நாயகர் பி.பி.மண்டல் பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைப்புரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை தனது ஆணையத்தின் மூலம் அம்பலப்படுத்தி, சமூகநீதியை உயர்த்திப்பிடித்த நாயகர் பி.பி.மண்டல் நினைவுநாளில் அவருக்கு எம் புகழ் வணக்கம்!

மண்டல் கொண்ட பார்வையை இந்த தேசம் உணரும் முன்பே நன்குணர்ந்து அவரது நோக்கத்துக்குத் துணையாக உறுதியாக நின்றது திராவிட இயக்கம். அவர் முன்னெடுத்த போராட்டம் இன்னும் நிறைவுறவில்லை.

துணிவும் நியாயமும் மிக்க அவரது பல பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படமாலே இருக்கின்றன. சமூகநீதிக்கான பயணத்தில் பல தடைகளும் புதிய வடிவங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

மண்டலைப் போற்றுவதென்பது அவரது கனவை முழுமையாக நிறைவேற்றுவதே அன்றி, அதனை நீர்த்துப்போகச் செய்வது அல்ல. அவர் கனவை நிறைவேற்றும் போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.