திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு: சுவரொட்டிகளால் பரபரப்பு!

அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் திடீரென புயல் வீசத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகரின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கமும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 2026-ன் துணை முதல்வர் என்ற வாசகமும் இடம் பெற்றிருப்பதால் திமுக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் நீடித்து வருகிறது. 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் மற்றும் 2016, 2021 சட்டசபை தேர்தல்கள் ஆகியவற்றில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இதனால் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் வருகின்றன. திமுகவும் காங்கிரஸும் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் முதன்மை கட்சிகளாக, பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைத்துள்ளன. இதனால் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் எழுவதும் இல்லை.

தற்போது திடீரென, திமுக தலைமைக்கு நெருக்கடி தரும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள், சென்னை மாநகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். செல்வப்பெருந்தகையின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியிருக்கும் இந்த போஸ்டரில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்ற முழக்கம் இடம் பெற்றுள்ளது. மேலும் 2026-ன் துணை முதல்வரே என செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கவிஞர் காமு ஷெரிப்பீன் பேரனும் காங்கிரஸ் மாநில செயலாளருமான கவி. கா.மு. AVM ஷெரிப் பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது. அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெற உள்ளன. இதனால் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளுக்கு போக்கிடம் இல்லை. ஆகையால் திமுக கூட்டணி கட்சிகள் இனி அடக்கித்தான் வாசிக்க வேண்டும் என்கிற நிலைமை இருந்து வருகிறது. ஆனால் திடீரென திமுக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரக் கோரி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.