“பாஜக- அதிமுக கூட்டணி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது” என்று, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடகோவை மத்திய உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வானதி சீனிவாசன் இன்று (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு சிலை அமைந்துள்ள பகுதிகளில் தூய்மை பணி செய்து விளக்குகளால் அவரின் படம் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஒரு நாள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கரை, காங்கிரஸ் கட்சி அவர் உயிரோடு இருந்த போது பலவகைகளில் அவமரியாதை, துரோகம் செய்தது. அன்றைய பிரதமர் நேரு, அம்பேத்கரின் புகழை குறைக்க பார்த்தார். ஆனால் பாஜக அவர் பிறந்த இடம், லண்டனில் அவர் படிக்க சென்ற இடம், அவர் உயிர் நீத்த இடம், தீக்ஷா பூமி என்று அவர் புத்த மதத்திற்கு மாறிய இடம், இறுதியாக அவர் எரியூட்டப்பட்ட இடம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் கோடிக்கணக்கில் நிதி செலவிட்டு மணிபண்டபம் அமைத்து புகழை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது.
பிரதமர் மோடி, டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செய்ய வேண்டும், அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காக நாட்டின் பண பரிமாற்ற செயலியை கூட ‘பீம் ஆப்’ என பெயரிட்டார். பாரத ரத்னா வழங்கப்பட்டது கூட பாஜக கூட்டாட்சியில் இருந்தபோது தான். சட்டப்பேரவையில் கோவை குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். பல்வேறு அமைச்சர்கள் கோவைக்கு பல திட்டங்கள் செய்ததாக கூறுகின்றனர். சாலைகளுக்கு ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம் என கூறுகின்றனர். ஆனால் சாலைகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்று இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
பாஜக ஜனநாயக ரீதியாக இயங்கும் கட்சி. பேரன் பிறந்து விட்டான், கொள்ளு பேரன் பிறந்தான் அதனால் எங்களுக்கு தலைவருக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் கட்சி அல்ல. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தனி முத்திரையை பதித்து இருக்கிறார். புதிய தலைவர் அதிமுக காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் நல்ல பங்களிப்பை கொடுத்தவர். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும், நல்ல முறையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தென்னிந்தியாவில் இருந்து இந்தி தெரியாத எனக்கு, மகளிர் அணியின் தேசிய தலைவராக பொறுப்பு வழங்கியிருக்கிறது. கட்சியில் பதவியே இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேல் உழைத்தவர்கள் எல்லாம் உள்ளனர். சரியான நேரத்தில் கட்சி, அவர்களுக்கு பொறுப்பு வழங்கும். கட்சி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் பாஜக- அதிமுக கூட்டணியே அமையாது என்று பேசினர். மத்திய அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதல்படி, அமைக்கப்பட்டு உள்ள இந்த கூட்டணி மிகச் சிறப்பாக செயல்படும்.
இக்கூட்டணி திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொகுதி வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் நான் பேசிய வீடியோவை கொடுங்கள் என எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். ஆனால் அதைகூட கொடுக்கவில்லை. நான் பேசும் வீடியோவை எடிட் செய்யும் எடிட்டருக்கு ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்க வேண்டும்.பேரவை தலைவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அண்ணாமலை தனிப்பட்ட காரணங்களுக்காக, உத்தரகண்ட் சென்றுள்ளார். மாநிலத் தலைவர் கோவை வரும்போது அவருடன் நிச்சயம் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.