நம்பிக்கையோடு புது வருடத்தை ஆரம்பிப்போம்: ஜான்வி கபூர்!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்து ஜான்வி கபூர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். எப்போதும் போல் இந்த வருடமும் எல்லோரும் சந்தோஷமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிக் கொள்கிறேன். நம்பிக்கையோடு புது வருடத்தை ஆரம்பிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.