அஜித்தின் குட் பேட் அக்லி: ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்!

ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு அஜித்தின் குட் பேட் அக்லி படத் தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், சிம்ரன், பிரியா வாரியர், யோகி பாபு, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி இருவேறு வகையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஆயினும் இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அஜித் ரசிகர்கள் அந்த படத்தில் வரும் பாடல்களுக்கு எழுந்து ஆட்டம் போடுவதால் நாற்காலிகள் உடைவதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

அது போல் குட் பேட் அக்லி திரைப்படம் ரூ 150 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த நாட்டுப்புற பாட்டு எனும் படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பாடலும் விக்ரம் படத்தில் என் ஜோடி மஞ்சக்குருவி பாடலும், சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ உள்ளிட்ட ரெட்ரோ பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தனது அனுமதியில்லாமல் இந்த 3 பாடல்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், தனது அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதற்காக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்க வேண்டும். 7 நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்திய அந்த பாடலை நீக்க வேண்டும். தான் இசையமைத்த பாடல்களை தடுக்கும் விதமாக மறுஉருவாக்க பாடல்கள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.