நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மோதலைத் தடுக்கச் சென்ற ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் ரோஸ்மெரி மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. பெற்றோர்களே இந்த பள்ளியில் தான் தன் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படும் பள்ளியாக இந்த பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் இன்று தனது ஸ்கூல் பேக்கில் அரிவாளை வைத்துக்கொண்டு வந்துள்ளார். திடீரென அந்த அரிவாளை எடுத்து மற்றொரு மாணவனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். சக மாணவனின் தலை, கைகளில் இந்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் பதறிப்போய் ஆசிரியர் ஒருவர் ஓடி வந்து அரிவாள் வைத்திருந்த மாணவரை தடுக்க முயன்றார். இதில் ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சரமாரியாக இருவரையும் வெட்டி விட்டு அந்த மாணவர் ஓடிவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து மாணவர் உயிருக்கு போராடினார். மற்ற மாணவர்களும் இது குறித்து ஆசிரியர்களுக்கு தெரியபடுத்தினர்.
இதற்கிடையே அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். காவல் நிலையம் பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்ததால் மாணவரே நடந்து சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர் ஒருவன் ரத்தக்கறை கொண்ட அரிவாளோடு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகே போலீசாருக்கு விஷயம் புரிந்தது. இதையடுத்து தான் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரித்தனர். தொடர்ந்து அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் சக மாணவனை மற்றொரு மாணவன் வெட்டிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புத்தகம் பிடித்து படிக்க வேண்டிய மாணவன் கையில் அரிவாள் எடுத்து சக மாணவனை வெட்டியது மற்ற மாணவர்களின் பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பதறிப்போய் உள்ளனர். எதற்காக இந்த மாணவர் அரிவாளை தூக்கினார் என்றும், எப்படி பள்ளிக்குள் அரிவாளை கொண்டு வந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக பள்ளியில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் பென்சில் கொடுக்கவில்லை என்றும், இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் தான் வீட்டில் இருந்த் அரிவாளை பேக்குக்குக்குள் வைத்து கொண்டு வந்து இந்த செயலலில் ஈடுபட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை மற்றொரு மாணவன் அரிவாளால் வெட்டியது சம்பவம் பற்றி நெல்லை காவல் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செதியாளர்களிடம் கூறுகையில், “பள்ளி மாணவர் அரிவாளால் வெட்டியதில், பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எதற்காக இந்த மாணவன் அரிவாளால் வெட்டினான் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
நெல்லை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இது போன்று மாணவர்களே அரிவாளை கையில் எடுக்கும் சம்பவம் அதிகரிப்பதாகவும் இது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.