வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வருகின்ற 2.5.2025 – வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து,செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி எதிர்கொள்ளும் என்று அண்மையில் அமித் ஷா அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் முதன்முறையாகக் கூடுவதால் இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படும் சூழலிலும், பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்தான் இந்த செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. எனவே இதில் கூட்டணி தொடர்பான மூத்த தலைவர்கலின் கருத்து, கடைநிலைத் தொண்டர்கள் மனநிலை பற்றி ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.