எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர் என்று கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் சம்பங்கள், வன்முறை சம்பவங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையில் சாதி, மத ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனைகள் வழங்கி குற்றங்களை தடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் மீண்டும் கூட்டணியை அமித்ஷா அறிவித்ததன் மூலம் குற்றங்கள், ஊழல்களில் இருந்து காப்பாற்றி கொள்ள பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர். இந்த கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை.
பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி என்று கூறும் விஜய், இப்போதுதான் வடை கடை போட்டு உள்ளார். அந்த வடையை மக்கள் எவ்வளவு பேர் வாங்குகின்றனர். காக்கா எத்தனை தூக்கி கொண்டு போகிறது என்பது இனிதான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.