இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!

‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? அப்படியெனில், இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளைகளில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா?’ என வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவையில் கடந்த ஏப்.2-ம் தேதி வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களை கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு கோரியிருந்தது.

இந்நிலையில், வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா? அல்லது உயர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமா? வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமெனில், இந்த சட்டத் திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறுவதற்கான காரணங்கள் என்னென்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பல்வேறு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் காரணங்களைத் தெரிவித்தனர். ‘5 ஆண்டுகள் ஒருவர் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றினால் மட்டுமே வக்பு நன்கொடை அளிக்க முடியும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? வக்பு விவகாரங்களில் பிற மதத்தினரை நியமிப்பது எப்படி சரியானதாக இருக்கும்? இவ்வாறு இந்து உள்ளிட்ட பிற மத நிர்வாகத்தில் வேற்று மதத்தினர் அனுமதிக்கப்படுவார்களா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள், ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துகள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? அப்படியெனில், இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? வக்பு சொத்துகள் எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த விசாரணையின் தொடக்கத்திலேயே, மாநில உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு வக்பு வழக்குகளை மாற்றுவது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிபதிகள் இருக்கையில் அமரும் போது எங்களுக்கு மதம் எதுவும் இல்லை- நீதிபதிகளை மதத்துடன் சார்புடையவராக நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்றனர்.

இதனையடுத்து வக்பு சட்டத்துக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, திமுக வில்சன் எம்பி உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இந்த விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றமும் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியது. முஸ்லிம்களின் வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக முடியும் என்றால், இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்கள் உறுப்பினராக முடியுமா? எதற்காக இப்படி ஒரு நடைமுறை என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது மேலும், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து உத்தரவுகளுக்கும் நாளை வரை இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல வக்பு சொத்துகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது; வக்பு சொத்துகளை வகைப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் நடைபெற உள்ளது.