நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2023 ஆண்டு சக மாணவரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மாணவர் சின்னதுரை படுயாமடைந்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மாணவரை தனியாக வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த கொடூர சம்பவம் நடந்தது. பட்டியலினத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரை கல்வியில் சிறந்து விளங்கி வந்தார். பள்ளி ஆசிரியர்கள் சின்னதுரையின் கல்வியறிவை கண்டு வியந்ததோடு மட்டுமல்லாது, சின்னதுரையை போல கல்வி கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே சின்னதுரை மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படும் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், இந்த விஷயத்தால் கோபம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே 2023 ஆகஸ்ட் மாதம் சின்னதுரையின் வீடு புகுந்த சக மாணவர்கள், அரிவாளை கொண்டு சின்னதுரையை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதை தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்கள், சின்னதுரையையும் அவரது சகோதரியையும் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தங்கையை விட, சின்னதுரைக்குதான் வெட்டு காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சின்னதுரையின் உயிர் காப்பாற்றப்பட்டது. தொடர் சிகிச்சை காரணமாக அவரால் பள்ளிக்கு வர முடியாமல் போனது. இருப்பினும் ஆசிரியர்கள் தினமும் இரண்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே சின்னதுரைக்கு பாடம் எடுக்கப்பட்டது.

சாதிய மோதல் காரணமாக சக மாணவர் தாக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. மாணவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதேநேரம் இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 7 பேரை காவல்துறை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது. நிலைமை ஓரளவுக்கு சீரானது. மாணவர் சின்னதுரை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்களை பெற்றிருந்தார். சிஏ படித்து ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே எனது கனவு என்று சின்னதுரை கூறி வந்த நிலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் 94 மதிப்பெண்களையும் பெற்று அசத்தியிருந்தார். தற்போது உயர்கல்வி பயின்று வருகிறார். பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் தற்போது மீண்டும் சின்னதுரை மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகர காவல்துறை ஆணையர் வினோத் சாந்தா ராம் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் நேரடியாக இறங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கிரின்டர் செயலி மூலம் பழகிய நண்பர்களை சந்திக்கவே தாமிரபரணி கொக்கிரகுளம் பகுதியில் சின்னதுரை சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு வைத்துதான் மாணவர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. மாணவரை அங்கு தனியாக வர வைக்க காரணம் என்ன? தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து நெல்லை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.