விஜயிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும்: அகில இந்திய முஸ்லீம் ஜமாத்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும் என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் எச்சரித்துள்ளார். விஜய் நடத்திய இப்தார் நோன்பு விருந்தில் மத ஒழுக்கம் இல்லாத, மத சடங்குகளை பின்பற்றாத நபர்கள் பலர் கலந்துக்கொண்டார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். மத தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஃபத்வா (மத சட்ட ஆலோசனை) என்று அழைக்கப்படுகிறது. ஃபத்வாவில் ரஸ்வி கூறியுள்ளதாவது:-

தவெக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும். சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்திருக்கிறார். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருக்கிறது. அவரது பின்னணி மற்றும் வரலாறே இஸ்லாத்திற்கு எதிரானது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மற்றும் முழு இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதம் மற்றும் வன்முறையுடன் தொடர்புப்படுத்தி காட்டியுள்ளார். இப்படியான படங்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீது தவறான படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செய்துவிட்டு விஜய் இஸ்லாமியர்களின் மத உணர்வை பயன்படுத்த முயல்கிறார். ஏனெனில் அவர் அரசியலுக்கு வர முயல்கிறார். இவரது பழைய நடவடிக்கைகள் முஸ்லீம்களுக்கு எதிரி போல இவரை கட்டமைத்திருக்கிறது. இவ்வாறு அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

அரசியல் களத்தில் விஜய் நுழைந்தது பற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பெற தவறிவிட்டது என்றும், எனவே திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கவே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் விஜய் பற்றி எச்சரித்திருப்பது அரசியல் களத்தில் சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது.