பண மோசடி வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.27.5 கோடி மதிப்பிலான பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது தந்தை ராஜசேகர ரெட்டி. காங்கிரஸ் சார்பில் ஆந்திராவின் முன்னாள் முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் ஜெகன்மோகன் ரெட்டி மீது பணமோசடி, லஞ்சமாக நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக 2011ம் ஆண்டில் சிபிஐ விசாரணை நடத்தி நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதோடு சிபிஐ விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. இதுபற்றிய விசாரணைக்கு அமலாக்கத்துறை என்ட்ரி கொடுத்தது. ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான ரூ.749 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. அதன்பிறகு இந்த வழக்கில் நடவடிக்கை என்பது எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான ரூ.27.5 கோடி மதிப்பிலான பங்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கார்மல் ஆசியா ஹோல்டிங் லிமிடெட், சரஸ்வதி பவர் மற்றும் இண்டஸ்ட்ரிஸ் பிரைவேட் லிமிடெட், ஹர்ஹா ஃபைர்ம் உள்ளிட்ட நிறுவனங்களில் ஜெகன்மோகன் ரெட்டி வைத்திருந்த பங்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ரூ.377.2 கோடி மதிப்பிலான டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் (டிசிபிஎல்) நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதன்மூலம் டிசிபிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.793.3 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.