“பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். எனவே, முகநூலிலும், எக்ஸ் தளத்திலும் யாரும் கூட்டணி குறித்து கருத்துச் சொல்ல வேண்டாம்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று (ஏப்.18) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் கட்சியின் பொறுப்பாளர்கள். மண்டல, கிளைப் பொறுப்பாளர்கள் என பலரும் இங்கு வந்திருக்கிறீர்கள். தேர்தல் கூட்டணைியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொள்வார்கள். எனவே, முகநூலிலும், எக்ஸ் தளத்திலும் அது எப்படி? இது எப்படி? என்று தயவுசெய்து யாரும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள யாரும் கூட்டணி பற்றி கருத்துகளைச் சொல்ல வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
காரணம், இன்றைக்கு இருக்கிற காலக்கட்டத்தில், சனாதனம், ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய குறிக்கோளாகவும், லட்சியமாகவும் இருக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையிலும் ஈடுபடக்கூடாது. எனவே,பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே, அதிமுக-பாஜக கூட்டணி குறித்து, நிர்வாகிகள், கட்சியினர் யாரும் பேட்டிக் கொடுக்கக்கூடாது, என்று அதிமுக தலைமைக் கழகம் அக்கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.