“234 தொகுதிகளில் 134 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம்” என்று சீமான் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு, விஜய் இஸ்லாமிய நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக அவரை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த சீமான், “விஜய் உள்நோக்கத்துடன் செயல்படுபவர் அல்ல. அவர் எதார்த்தமானவர். இப்தார் விருந்துக்கு அழைப்பின் பேரில் பங்கேற்றிருப்பார். இதை பீகார், பஞ்சாப், பாகிஸ்தானில் இருந்து அறிக்கை விட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது,” என்று கூறினார்.
மேலும், “விஜய் தனிப்பட்ட முறையில் எனக்கு நன்கு தெரிந்தவர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கவனத்தை ஈர்க்க மட்டுமே பேசப்படுகின்றன. இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. இப்படி பேசினால் அடுத்த முறை இப்தார் விருந்துக்கு அழைத்தால் வருவாரா?” என்று கேள்வி எழுப்பினார். மத உணர்வுகளை மதிக்கும் அதே வேளையில், தனது உறவினர்களுடன் இஸ்லாமிய சொந்தங்கள் இருப்பதாகவும், ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசியல் ஆக்குவதை தவிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் தேசியத்தை இந்திய தேசத்தின் கீழ் ஏற்றுக்கொள்வது குறித்து பேசியிருந்தார். இதற்கு மரியாதையுடன் பதிலளித்த சீமான், “அது அண்ணனின் கருத்து. நான் அதை மதிக்கிறேன், ஆனால் ஏற்கவில்லை. தமிழ் தேசியம் குறித்து நாங்கள் 2006 முதல் தொடர்ந்து பேசி வருகிறோம். இதை எனக்கு கற்பித்தவர் என் பேராசான் திருமாவளவன்,” என்று குறிப்பிட்டார். மேலும், என் எதிரியை கருவில் இருக்கும்போதே குறிப்பிட்டுவிட்டேன் என்று கூறினார்.
தமிழர் உரிமைகளுக்காக நாம் தமிழர் கட்சியின் தொடர் போராட்டங்களை விவரித்த சீமான், “மொழிக்காக உடலில் நெருப்பு கொட்டி உயிரிழந்தவர்கள், காவிரி நதிநீருக்காக என் தம்பி விக்னேஷ், ஈழப் படுகொலையை தடுக்க முத்துக்குமார், எழுவர் விடுதலைக்காக செங்கொடி உள்ளிட்டோர் தங்கள் உயிரை ஈந்தனர். இது தமிழ்நாட்டின் வீரம்,” என்று உருக்கமாகப் பேசினார். பாரதியின் “வீர சுதந்திரம் வேண்டி நின்றார்” என்ற வரிகளை மேற்கோள் காட்டி, சுதந்திர பசி கொண்டவர்களை எந்த அடக்குமுறையும் தோல்வியடையச் செய்ய முடியாது என்று வலியுறுத்தினார்.
“நாங்கள் போராளிகளாக இருக்கிறோம், நீங்கள் வாக்காளர்களாக இருக்கிறீர்கள்,” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், தங்கள் முன்னோர்களின் தியாகத்தை வீணாக்காமல், அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தலைவர்கள் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவதாகவும் கூறினார்.
வரவிருக்கும் தேர்தலுக்கான தயாரிப்பு குறித்து பேசிய சீமான், “234 தொகுதிகளில் 134 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார். தென்காசி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கீழ்வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் “கட்சியின் சின்னத்துக்காக காத்திருக்கிறோம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அறிவித்தால் உற்சாகம் குறையும்,” என்று நகைச்சுவையாகவும் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் நடக்கும் சாதிய பிரச்னைகளை தீர்க்க நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டார். மூன்று மணி நேரம் நேரடியாக சாட்சி அளித்த ஒரே அரசியல் கட்சித் தலைவன் நான்தான். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று விமர்சித்தார். மேலும், பல்வேறு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அவை முன்னேற்றமின்றி இருப்பதாகவும், “புழு கூட அரை இன்ச் நகரும், ஆனால் இந்தக் குழுக்கள் நகராது,” என்று சீமான் கிண்டலடித்தார்.
தமிழர்களின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளித்த சீமான், “எங்களுக்கு சோர்வு இல்லை. மக்களின் உணர்வுக்காகவும், உரிமைக்காகவும் நாங்கள் உயிராக இருக்கிறோம். வாக்குகளுக்காக அல்ல, மக்களின் உயிருக்காக நாங்கள் நிற்கிறோம்,” என்று உருக்கமாகப் பேசினார். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக இளைஞர்களை முன்னிறுத்தி, புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.